×

குற்றாலத்தில் சீசன் காற்று: மெயினருவியில் தண்ணீர்

தென்காசி: தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக குற்றாலம் திகழ்கிறது. இந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று மதியம் வரை தென்காசி, குற்றாலம் பகுதிகளில் வெயில் காணப்பட்டது. மதியத்திற்கு பிறகு திடீரென மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மேகக்கூட்டங்கள் திரண்டு சாரல் மழை பொழிந்தது. மாலையில் இதமான தென்றல் காற்றும் வீசியது. அடுத்த ஒரு சில மணி நேரங்களில் அருவிகளில் தண்ணீர் வரத்துவங்கியது. அருவிகளில் தண்ணீர் விழுந்த போதும் தற்போது கொரோனா ஊரடங்கு காலமாக இருப்பதால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குற்றாலம் பகுதியில் உள்ள பொதுமக்களும், வியாபாரிகளும் ஆண்டிற்கு 3 மாதங்கள் மட்டுமே நடைபெறும் வர்த்தகத்தை நம்பியே உள்ளனர். கடந்தாண்டு கொரோனா முதல் அலை காரணமாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்தாண்டு 2வது அலையால் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் தற்போது தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் கொரோனா முழுமையாக கட்டுக்குள் வந்தால் குற்றாலம் அருவிகளில் கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் மூலம் கிடைக்கும் வருவாய் என்பது குற்றாலம் பகுதி மக்களுக்கு மட்டும் அல்லாமல் தென்காசி மாவட்டம் முழுவதற்குமான பொருளாதார மேம்பாடு என்பது குறிப்பிடத்தக்கது. குற்றாலத்தில் நேற்று பெய்த சாரல், அருவிகளில் விழுகின்ற தண்ணீர் மேலும் சில தினங்களுக்கு நீடித்தால் சீசன் முழுவீச்சில் துவங்கிவிடும்….

The post குற்றாலத்தில் சீசன் காற்று: மெயினருவியில் தண்ணீர் appeared first on Dinakaran.

Tags : Courtalam ,Meinaruvi ,Tenkasi ,Tamil Nadu ,Mainaruvi ,
× RELATED குற்றாலம் அருவிகள் வறண்டு காட்சி அளித்த நிலையில் தற்போது இடியுடன் மழை!